Tuesday, November 18, 2025 2:18 pm
காலி, மீடியாகொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் உணவகம் ஒன்றில் நுழைந்து நேற்று திங்கட்கிழமை இரவு நடத்திய துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உணவக
உரிமையாளரான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீடியகொடவைச் சேர்ந்த 47 வயதுடைய ரோசி என அழைக்கப்படும் மகாதுர ரோசிகா ஷமீன் என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் சீன உணவகம் நடத்தி வரும் உரிமையாளரான பெண் சம்பவ தினமான நேற்று இரவு 8.30மணியளவில் உணவகத்தில் இருந்த போது அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இனந்தெரியாத இருவர், அந்தப் பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்ததையடுத்து வர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த பெண், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீடியாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பெண் இவ்வருடம் மே மாதம் 3 ஆம் திகதி மீடியாகொடவில் உள்ள உணவகத்தில் கரந்தெனிய சுத்தாவின் பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்ட
மகாதுர நளின் வசந்தவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
கரந்தெனிய சுத்தாவின் மைத்துனரின் மரணத்துக்குப் பழிவாங்கும் விதமாக இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
அதன்படி, இந்த ஆண்டு இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது, இதில் 54 பேர் இறந்துள்ளனர் மற்றும் 53 பேர் காயமடைந்துள்ளனர்.

