Sunday, November 16, 2025 6:41 am
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பின் பின்னர், பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சையத் அமர் ராசா, சவூதி அரேபியா முப்படைக் கூட்டு அதிகாரிகளின், தளபதி ஜெனரல் ஃபயாத் பின் ஹமீத் ஆகிய இருவரும் நேரில் சந்தித்து உரையாடியதாக பாகிஸ்தான்ரூடே (pakistantoday) என்ற ஆங்கில செய்தித் தளம் இன்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்திப்பு நடந்தாக, பாகிஸ்தான் இராணுவ ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பை மேற்கோள் காண்பித்து இச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு முறைமைகளில் மத்திய கிழக்கு நாடுகளின் உதவிகள் ஒத்துழைப்பு பற்றி பாகிஸ்தான், சவூதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இக் கோரிக்கையை மையமாகக் கொண்டு, பரஸ்பர மூலோபாய நலன்களை மையமாகக் கொண்ட விவாதங்கள், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், இயங்குதன்மையை வலுப்படுத்துதல் மற்றும் மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவை தொடர்பாக உரையாடப்பட்டது.
இந்தோ – பசுபிக் உள்ளிட்ட பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் அதிக தன்னம்பிக்கை ஆகியவற்றுக்கான தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், பாகிஸ்தான் – சவூதி அரேபியா என்ற இரு அரசுகளும் நீண்டகால இராணுவப் பங்காளிப்பை கட்டி எழுப்பும் தங்கள் உறுதியை இரு தரப்பும் வெளிப்படுத்தியுள்ளன.
அதிகாரிகள் தற்போதைய கூட்டு முயற்சிகளை மதிப்பாய்வு செய்து, கூட்டுத் திட்டங்களின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்ததால், பாதுகாப்பு உறவின் ஆழத்தை இந்தக் கூட்டம் எடுத்துக்காட்டியுள்ளது.
பாகிஸ்தான் – சவூதி அரேபியா இருதரப்பு பாதுகாப்பு தொழில் கூட்டமைப்பின் சிறப்புக் கூட்டமும் ரியாத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் முப்படைகளின் தூதுக்குழுவிற்கு லெப்டினன்ட் ஜெனரல் சையத் அமர் ராசா தலைமை தாங்கினார், அதே சமயம் சவூதி அரேபியாவின் நிர்வாக விவகாரங்களுக்கான பாதுகாப்பு உதவி அமைச்சர் காலித் அல் பியாரி தலைமை தாங்கினார்.
பிராந்திய பாதுகாப்பு குறிப்பாக இந்தியா ஆப்பகானிஸ்தான் எல்லைப் பிரச்சினை விவகாரங்களில் கூட்டு இராணுவ ஒத்துழைப்பு பற்றியே விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

