Saturday, November 15, 2025 10:10 am
மருதங்கேணி வீதியின் தற்போதைய நிலைமைகளை பார்க்கையில், கடந்த காலங்களில் அந்த வீதி அபிவிருத்தி செய்யப்படும் போது ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம்.
மோசடிகள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட் டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைகள் நகர அபிவிருத்தி அமைச்சரும், சபை முதல்வருமான பிமல்ரத்நாயக்க தெரிவித்தார்.
‘வடமாராச்சி கிழக்கு பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு கீழான இரண்டு வீதிகள் உள்ளன.
இப்போது பருத்தித்துறை – மருதங்கேணி பி 370 வீதியின் ஒரு பகுதி மாத்திரமே சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.
சேதமடைந்த குறித்த பகுதி 2016 -2017 காலப்பகுதியில் மகநெகும நிறுவனத்தால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
அவற்றில் பல இடங்கள் தற்போது சேதமடைந்த நிலையில் இருக்கின்றன. வீதியின் அடியில் காணப்படும் மண் தட்டுக்களால் வீதி சேதமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தற்போது உள்ளக நிதி மதிப்பீடு பிரிவினால் ஆரம்பப்பட்ட ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
அதன் இறுதி அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பின்னர் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் அந்த வீதியின் அபிவிருத்தி பணிகளுக்காக ஜனவரியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வீதி உடைந்துள்ளமையை பார்க்கும் போது ஊழல் நடந்துள்ளதாக புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது என பிமல்ரத்நாயக்க தெரிவித்தார்.

