Saturday, November 15, 2025 10:09 am
இந்தியாவின் காஷ்மீர் நவ்காம் பொலிஸ் நிலையத்தில் சில வெடிபொருட்கள் வெடித்ததால், தடயவியல் பிரிவு பொலிஸார் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்துள்ளனா். மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக நியூஸ்ஒன்எயார் (newsonair) என்ற இந்திய அரச ஆங்கில ஊடகம் இன்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
புலனாய்வு பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்ட வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, திடீரென அந்த வெடிபொருட்கள் வெடித்ததால் தடயவியல் பிரிவு பொலிஸார் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிபொருட்கள், ஹரியான மாநிலத்தின் ஃபரிதாபாத் (Haryana’s Faridabad) பிரதேசத்தில் கைப்பற்றபட்டு, காஷ்மீர் நவ்காம் பொலிஸ் நிலையத்துக்கு ஆய்வுக்காக கொண்டு வரப்பட்டவை என்று அந்த செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
இந்த வெடிபொருட்கள் புதுடில்லி செங்கோட்டை அருகில் 13 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டவை என்று இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தாக அந்த செய்தித் தளத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத்தில் மேலும் சோதனை நடத்திய பொலிஸார் மேலும் 3000 கிலோகிராம் அமொனியம் நைட்ரைட் என்ற வெடிமருந்துகளை கைப்பற்றியுள்ளனர்.
புதுடில்லியில் செங்கோட்டை அருகே திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் 13 பேர் உயிரிழந்து 36 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் காஷ்மீர் பகுதியில் இடம்பெற்ற இத் தாக்குதல் இந்தியாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த முஸமில் ஷகீல் கனியா என்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக இந்திய தேசிய மட்டத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

