Saturday, November 15, 2025 10:10 am
கொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக், ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை சந்தித்து உரையாடியுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை, கொழும்பு பத்தரமுல்ல பெலவத்தையில் உள்ள ஜேவிபியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில், அநுர அரசாங்கத்தின் செயற்பாடுகள் – பிராந்திய பாதுகாப்பு விடயங்கள் பற்றி உரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரித்தானிய – இலங்கை இராஜதந்திர உறவு, அதுவும் நீண்டகால நட்புறவு பற்றி பேசப்பட்டது. அத்துடன், இலங்கைக்கு, பிரித்தானிய அரசு எப்போதும் ஒத்துழைப்பு வழங்கும் என்று உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் சந்திப்பில் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, அநுர அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடு மற்றும் மேற்கு – ஐரோப்பிய நாடுகளுடன் ஒத்துழைத்துச் செயற்படுவது பற்றி பிரித்தானிய அரசுடன் விரிவாக உரையாட, ரில்வின் சில்வா எதிர்வரும் 21 ஆம் திகதி தலைநகர் லண்டனுக்குச் செல்லவுள்ளார்.
இதற்கான அழைப்பை உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் ரில்வின் சில்வாவிடம் நேரடியாக கையளித்துள்ளதாக ஜேவிபி தலைமையகம் தெரிவித்துள்ளது.
இன்றைய சந்திப்பில் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் பிரிவின் முதனிலை செயலாளர் டொம் சொப்பர், அரசியல் ஆலோசகர் இன்ஷாப் மாகர், மற்றும் ஜேவிபி சட்டத்தரணி மது கல்பனா ஆகியோர் பங்குபற்றினர்.
ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சீனாவுடன் கூடுதல் உறவைப் பேணும் என எதிர்கூறப்பட்ட நிலையில், அமெரிக்க – இந்திய அரசுகளை மையப்படுத்தியும் பிரித்தானிய ஆதரவோடும், மேற்கு நாடுகளுடன் உறவை பேணும் அணுகுமுறையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பின்பற்றி வருகிறார்.
ஆனால், ஜேவிபியின் அடிப்படைக் கொள்கையோடு செயற்பட்டு வரும் ரில்வின் சில்வா, அதற்கு ஒத்துழைக்க தயங்கிய ஒரு பின்னணியில், லண்டன் பயணம் அமைந்துள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர்.
ரில்வின் சில்வா, இந்தியாவுக்கும் பயணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

