Friday, November 14, 2025 11:05 am
நல்லூரில் உள்ள யாழ் மாநகர சபைக்கு சொந்தமான காணியில், தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 21ம் திகதி மாவீரர் வாரம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், யாழ் மாநகர சபைக்கு சொந்தமான காணியில் ஆரம்ப கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தப் பணிகளின் போது யாழ் மாநகர முதல்வர், பிரதி முதல்வர், சபை உறுப்பினர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றனர்.

வழமையாக மாவீரர் நாள் நடைபெறும் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கு, முன்பாகவுள்ள காணியில் நினைவேந்தல் செய்வதற்கு இரண்டு தரப்புக்கள் கோரிக்கை விடுத்ததால் யாருக்கு கொடுப்பது என முடிவு எட்டப்படாத நிலையில், யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நினைவேந்தலை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
மாநகர முதல்வரால் முன்வைக்கப்பட்ட யோசனையை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) தவிர்ந்த யாழ் மாநகர சபையில் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளும் உறுப்பினர்களும் வரவேற்றனர்.
இந்நிலையில் நினைவேந்தலுக்கான ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


