Friday, November 14, 2025 8:12 am
இந்திய தலைநகர் புதுடில்லியில் சென்ற திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன வெடிவிபத்து தெளிவான பயங்கரவாத தாக்குதல் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இத் தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என்று கூற இந்தியா மறுத்துள்ள நிலையில், அமெரிக்கா பயங்கரவாத தாக்குதல் என இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
த இந்து (thehindu) என்ற ஆங்கில செய்தித் தளம், இன்று வியாழக்கிழமை இத் தகவலை வெளியிட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பான முழுமையான விசாரணைக்கு அமெரிக்கா ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளதாக த இந்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இத் தாக்குதல் பற்றி இந்தியா மிக அவதானமாகவும் திறமையாகவும் விசாரணை நடத்தி வருகின்றமை தொடர்பாக மார்கோ ரூபியோ பாரட்டியுமுள்ளார்.
புதுடில்லி செங்கோட்டைக்கு எதிரே கடந்த 10 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு, வெடிபொருளை மறைத்து எடுத்துச்சென்ற வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியதால் 13 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
இப் பின்னணியில் விசாரணைக்கு ஒத்துழைக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் அது பற்றி இந்திய மத்திய அரசு இதுவரை எதனையும் கூறவில்லை. அமெரிக்காவுடன் மிகச் சமீப நாட்களாக இந்தியாவுக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டு வருகின்ற சூழலில், இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
அதேவேளை, புதுடில்லி தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என இந்தியா கூற மறுத்திருந்தாலும், இத் தாக்குதல் பயங்கரவாத நோக்கம் கொண்டது என பிரதமர் நரேந்திரமோடி, இந்திய பொலிஸாருக்கு அறிவுறுத்தியதாக அமெரிக்காவின் நியூயோர்க் ரைம்ஸ் (New York Times) செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
மோடியின் இந்த அறிவுறுத்தலின் பின்னர், இத் தாக்குதல் பயங்கரவாத நோக்கம் கொண்டது என்பதை இந்தியா ஏற்பதாக த இந்து தெரிவித்துள்ளது.

