Thursday, November 13, 2025 3:07 pm
355 கிலோ கிராம் போதைப்பொருளுடன் மாலைத்தீவு கடற்பரப்பில் வைத்து, அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 5 மீனவர்களை 30 நாட்கள் தடுப்புக்காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளது.
கடந்த 7 ஆம் திகதி இலங்கையை சேர்ந்த “அவிஷ்க புதா” மீன்பிடி படகு மாலைத்தீவு பாதுகாப்பு பிரிவினரால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தது.
மீன்பிடி படகில் இருந்து மீட்கப்பட்ட 24 பொதிகளில் இருந்து 58 கிலோ 600 கிராம் ஹெரோயின் மற்றும் 297 கிலோ 300 கிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாலைத்தீவு பாதுகாப்பு பிரிவு உறுதிப்படுத்தியிருந்தது. இலங்கையைச் சேர்ந்த 28, 34, 39, 42 மற்றும் 63 வயதுடைய ஐந்து மீனவர்களே சம்பவம் தொடர்பில் கைதாகியிருந்தனர்.
சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவும், அவர்களை அழைத்து வருவதற்காகவும் இலங்கை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று மாலைத் தீவுக்கு பயணமாகியிருந்தது.
மாலைத்தீவு பாதுகாப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை காரணமாக சந்தேகநபர்களை அழைத்துவர முடியாமல் போயுள்ளதுடன், மாலைதீவுக்குச் சென்றிருந்த அதிகாரிகள் குழு மீள நாடு திரும்ப உள்ளது என கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

