Thursday, November 13, 2025 1:09 pm
அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட கால அரசு முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டமூலத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் பேசிய டிரம்ப், 43 நாள் பொது முடக்கத்தால் “மக்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் இப்போது வழக்கமான செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும்” என்று கூறினார்.
குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சபை 222-209 வாக்குகளால் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றியது.
சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டதன் மூலம் 43 நாள் பணிநிறுத்தத்தால் செயலற்ற நிலையில் இருந்த கூட்டாட்சி ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை முதல் தங்கள் பணிகளுக்குத் திரும்புவார்கள். முழு அரசாங்க சேவைகளும் செயல்பாடுகளும் எவ்வளவு விரைவாக மீண்டும் தொடங்கும் என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை.
அக்டோபர் முதல் பல அரசு சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன இதனால் சுமார் 1.4 மில்லியன் மத்திய ஊழியர்கள் ஊதியமின்றி வேலை செய்கின்றனர். நாடு தழுவிய ரீதியில் விமானப் பயணம் தடைபட்டுள்ளது. இதனை கருத்திற் கொண்டு அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் மிக நீண்ட அரசு முடக்கத்தை முடிவிற்கு கொண்டு வந்துள்ளார்.

