Thursday, November 13, 2025 1:10 pm
ராமேஸ்வரம் பகுதியில் நேற்று புதன்கிழமை நள்ளிரவு சூறைக்காற்றுடன் கூடிய கடல் சீற்றம் ஏற்பட்ட காரணத்தினால் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்துள்ளது.
சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், சூறைகாற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டது.
இந்த அனர்த்தம் காரணமாக ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மூன்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகு ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்துள்ளன. சேதம் அடைந்த படகுகளை மீட்கும் பணியில் படகின் உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் தற்போது நடைபெற்று வரும் தூண்டில் வளைவு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும், நேற்று சூறைக்காற்றுடன் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் சேதம் அடைந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


