Wednesday, November 12, 2025 8:41 am
இலவச சுகாதார அமைப்பு கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது என்று அரச
வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறை, மருந்துப்பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரணப் பற்றாக்குறை போன்ற நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு தவறிவிட்டது என சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
2026 ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலேயே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று நடைபெற்ற அவசர மத்தியக் குழுக் கூட்டத்துக்குப் பின்னர் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
‘தற்போதைய நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. வைத்திய சாலைககள் நோயாளர்கள் பராமரிப்பைத் தொடர்ந்து நடத்துவதில் கடுமையாகப்போராடி வருகின்றன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பொருளாதார செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்குச் சுகாதாரத்துறையை வலுப்படுத்த ஒரு நிலையான திட்டம் அவசியம் என்பதைக் கடந்த காலத்தில் பலமுறை அறிவித்திருந்தாலும், இதுவரை எந்தவொரு அர்த்தமுள்ள கலந்துரையாடலும் நடை பெறவில்லை.
அரசு பொருளாதார மீட்சியைப் பற்றி உரைகள் நிகழ்த்திக் கொண்டிருந்த போதிலும், 2026 வரவு – செல்வுத் திட்டத்தில் பொதுச் சுகாதார அமைப்பைப் பாதுகாப்பதற்கான தெளிவான திட்டம் இல்லை.
மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களுக்காகப் பெரிய ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தாலும், தரமான மருந்துகளின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதிப்படுத்த ஒரு திட்டவட்டமான திட்டம் இல்லை.
நாட்டில் மருத்துவ நிபுணர்களைத் தக்கவைத்துக்கொள்ளவோ அல்லது அரசு சுகாதாரத்துறையில் தொடர்ந்து பணியாற்றுவோரை ஊக்குவிக்கவோ நடவடிக்கைகள் எதுவும் இல்லை.
நெருக்கடியின் போது அர்ப்பணிப்புடன் இருந்த மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களைப் புறக்கணிப்பது வரலாற்றுப் பிழையாகும்.

