Tuesday, November 11, 2025 9:07 pm
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலை இந்திய அரசால் ஆதரிக்கப்படும் தீவிரவாதக் குழுக்கள் ஈடுபட்டதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார் என்று பிபிசி (BBC) ஆங்கில செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
நிராயுதபாணிகளான பாகிஸ்தானிய குடிமக்கள் மீது இந்தியாவின் பயங்கரவாத பினாமிகளால் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களை கண்டிப்பதாகவும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்றும் பிரதமரின் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை இன்று பாகிஸ்தானிலும் நேற்று திங்கட்கிழமை புதுடில்லியிலும் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதா என்ற கேள்வியை புலூம்பேர்க் (Bloomberg) என்ற ஆங்கில ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்திய – பாகிஸ்தான் முரண்பாடுகளுக்கு மத்தியில் இடம்பெறும் இத்தகைய தாக்குதல்கள் பற்றிய சந்தேகங்களுக்கு இரண்டு அரசுகளும் பதில் வழங்கவில்லை எனவும், ஆனால் இந்தியா, பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இஸ்லாமபாத்தில் தற்கொலை குண்டுவெடிப்புகள் கடந்த சில வருடங்களாக இடம்பெறவில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் மக்கள் – சட்டத்தரணிகள் அதிகமாகக் கூடும் நீதிமன்றத்திற்கு வெளியே இன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு சந்தேகம் எழுப்பியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் குறைந்தது 27 பேர் காயமடைந்தனர்
மாவட்ட நீதிமன்றத்தை தாக்க ஒரு குண்டுதாரி திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் உள்ளே செல்ல முடியவில்லை என்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நக்வி கூறியதாக ஏப்பி (AFP) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குண்டுதாரியை அடையாளம் காண்பதற்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிப்பார்கள் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் நக்வி கூறினார்.
அதேவேளை, நேற்றுத் திங்கட்கிழமை இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் வாகனம் ஒன்று வெடித்து சிதறியதில் 8 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். ஆனால் இச் சம்பவத்தை இந்திய அரசு பயங்கரவாதத் தாக்குதல் என்று கூறவில்லை. ஆனாலும் வாகனம் வெடித்துச் சிதறிய பின்னணியில் உள்ள சதிகாரர்கள் தப்ப முடியாது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக கூறியுள்ளார்.
ஆனால் பாகிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து இந்தியா எதுவும் கூறவில்லை எனவும் அமைதி காப்பதாகவும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளதாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

