Tuesday, November 11, 2025 8:13 pm
நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில், தமிழர்களின் காணிப் பாதுகாப்பு, தமிழ் மக்களுக்கான நீதி, அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் இந்த அரசாங்கத்திடம் தெளிவான நிலைப்பாடு இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு உறுதிமொழிகளும் இல்லாமையினால், அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்று கட்சி விரைவில் முடிவெடுக்கும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் ஆராயவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பில் அமைந்துள்ள காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சிறிநாத் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில், எங்களுடைய எதிர்பார்ப்பது என்பது வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் நலத் திட்டச் செயற்பாடுகள் கடந்த 16 ஆண்டுகள் சென்றுவிட்ட நிலையிலும் எதுவும் நடக்கவில்லை எனறு கவலை வெளியிட்டார்.
முன்னைய அரசாங்கங்களால் இதய சுத்தியுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. அதேபோன்று அநுர அரசாங்கமும் இதயசுத்தியோடு செயற்படுவதாக சொல்ல முடியாது. போரக் காலத்துக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல நூற்றுக்கணக்கான கிராமிய குளங்கள் இருந்தன.
தற்போது வன இலாகா, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை போன்றன அவற்றுள் தலையீடு செய்து குளங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. மாவட்டத்தில் நீர் வளத்தை முறையாக பேணுவதற்குரிய செயற்றிட்டங்கள் சொல்லப்படவில்லை என்று அவர் குற்றம் சுமத்தினார்.
அரசியல் தீர்வு மிகவும் முக்கியமானது. முதற்கட்டமாக மாகாண சபை தேர்தலை நடத்துவதற்குகூட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் தேர்தல் எப்போது நடைபெறும் என்று ஜனதிபதி அநுர கூறவில்லை.
மாறாக தேர்தல் முறையில் மாற்றங்களைச் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் அறுதிப் பெரும்பான்மை உள்ள அரசாங்கம் பொருத்தமான தேர்தல் முறையை உருவாக்க முடியும் என்று சுட்டிக்காட்டிய அவர், ஆகக் குறைந்த ஒரு தீர்வு திட்டத்தை மாகாண சபை ஊடாக இருக்கின்ற அந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படு்தாமல் இழுத்தடிக்கப்படுகின்றமை குறித்து பலமான சந்தேகங்கள் எழுவதாகவும் சொன்னார்.
அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை என்பதை மறந்து நிலையில், அமைச்சர்கள் அரசியல் கைதிகள் என்ற விடயங்கள் இல்லை என்று கூறுகின்றார்கள். மறுக்கிறார்கள். தேர்தலுக்கு முன்னரான உறுதிமொழி தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் மீறப்படுகின்றனவா அல்லது தட்டிக் கழிக்கப்படுகின்றனவா என்ற கேள்வியை அவர் எழுப்பினர்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் சிறிநாத் பதிலளித்தார்.

