Tuesday, November 11, 2025 10:55 am
10 ஆண்டுகளுக்குப் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவொன்று, நேற்று திங்கட்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு சென்றனர்.
நுகேகொடையில் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறும், எதிர்ப்பு பேரணி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக டார்லி வீதியில் உள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது அக்கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவித்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க,
ஜனநாயகத்திற்காக திசைக்காட்டிக்கு வாக்களித்த அனைத்து தரப்பினரும், தாம் ஏமாற்றப்பட்டதை தற்போது உணர்ந்துள்ளனர். 21ஆம் திகதி அந்த பொய்யை நாம் அம்பலப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ,
தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என அரசாங்கத்திடம் கூறவுள்ளோம். கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டவற்றில் 50% கூட செய்யப்படவில்லை. அப்படியிருக்க ஜனாதிபதி 4 1/2 மணி நேரம் பேசுகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

