Saturday, November 8, 2025 7:03 pm
கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பான சந்தேகத்தில், யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று சனிக்கிழமை மாலை தெரிவித்தனர்.
கொட்டாஞ்சேனை கல்லூரி விதியின் உட்பக்கமாகச் செல்லும் 16வது ஒழுங்கையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களும், கொலைக்கு மூளையாக செயற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களுமே யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, துப்பாக்கிதாரிகள் பயணித்த ஆடம்பர வாகனம் கொழும்பு பஞ்சிகாவத்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையின் பின்னர், வாகனத்தைக் கைவிட்டு துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றுள்ளனர். பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட ஆட்ம்பர வாகனம், தற்போது கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
வாகன உரிமையாளர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும், அதன் பின்னர் உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

