Friday, November 7, 2025 4:07 pm
அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் திருகோணமலை, சிகிரியா உள்நாட்டு விமான நிலையம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தையும் புனரமைப்பதற்காக 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்..
வரவு செலவுத் திட்ட அறிக்கையை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய அவர் அபவிருத்தித் திட்டங்கள் நிவாரணங்கள் பற்றி விரிவாக விளக்கிக் கூறினார்.
அதேவேளை அரச ஊழியர்களின் சம்பளம் மூன்று கட்டங்களாக அதிகரிப்படும் என்றும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் வேலையின்மை வீதத்தை 4.5 இல் இருந்து 3.8 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரவித்துள்ளார்.
இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது நாளாந்த சம்பளமாக 1,350 ரூபா வழங்கப்படுகின்றது என்றும் 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் அது 1,550 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைத்தார்.
1,550 ரூபா சம்பளத்துக்கு மேலதிமாக அரசாங்கத்தால் வரவுக்கான நாளாந்த கொடுப்பனவாக 200 ரூபா வழங்குவதற்கு முன்மொழியப்படுகின்றது.
தோட்ட நிர்வாகம் 1,550 ரூபா வழங்கும், அரசாங்கம் 200 ரூபா வழங்கும். அந்தவகையில் நாளொன்றுக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,750 ரூபா கிடைக்கப்பெறும்.
தோட்டத் தொழிலாளர்கள் 25 நாட்கள் வேலைக்கு வந்தால் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கப்பெறுகின்றது.
பெருந்தோட்ட நிறுவனங்களுக்குரிய குத்தகை ஒப்பந்தம் 2042 இல் நிறைவு பெறுகின்றது. முறையாக நிர்வாகிக்கப்படாத பெருந்தோட்டங்கள் மீள பெறப்படும் என்றும் ஜனாதிபதி விளக்கிக் கூறினார்.

