Thursday, November 6, 2025 9:59 pm
‘தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் மீண்டும் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரனால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை நாம் வரவேற்கின்றோம். ஆனால், சில நிபந்தனைகளை அவர் கூறியுள்ளார். அவை என்ன நிபந்தனைகள் என இதுவரை எமக்குத் தெரியாது. பேச்சுவார்த்தை ஊடாக இணைய
முடியும். பேசுவதற்கு முன்னர் நிபந்தனைகளை முன்வைப்பது பொருத்தம் இல்லை.’
இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
‘மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண ஆட்சி முறைகளை விடுத்து அரசு ஆளுநர் ஆட்சியை நடத்துவதை நிறுத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கூறி வருகின்றது.
இதனடிப்படையில் பார்க்கும் போது அடுத்த வருடமும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நிலைப்பாட்டில் அரசு இல்லை எனத் தெரிகின்றது.
எல்லை நிர்ணய வேலைகளை விரைவில் மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை அரசு நடத்த வேண்டும். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைத்துப்பாக்கிகளைக் கோரியிருக்கின்றனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் கைத்துப்பாக்கிகளைக் கோரியிருக்கலாம். கடந்த அரசுகள் அனைத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியிருந்தது.
ஆனால், இந்த அரசு பாதுகாப்பு வழங்காத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கலாம். அரசு முதலில் பாதாள உலகக் குழுக்களை ஒழிக்க வேண்டும்.’ என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். .

