Wednesday, November 5, 2025 5:33 pm
அநுர அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ள நிலையில், இலங்கைத்தீவின் பொருளாதாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது பரிந்துரைத்த அதே திட்டங்களை, அநுரசாங்கம் செயற்படுத்துகிறது. இந்த அரசாங்கத்திடம் புதிய திட்டங்கள் இல்லை என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த நிலையில், பொருளாதாரம் தொடர்பாக முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதில்களை மத்திய வங்கி அதிகாரிகள் நாடாளுமன்றத்திற்கு வந்து நேரடியாக பதில்களை வழங்குவார்கள் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிதி தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்.டத்தில் அளுநர் இவ்வாறு கூறியுள்ளார்.
இக் கூட்டத்தில் குழுவின் தலைவர் என்ற முறையில், சில கருத்துக்களை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பனர் ஹர்ஷ டி சில்வா, பணவியல் கொள்கை, பணவீக்கம் அல்லது மாற்று விகிதங்கள் குறித்து கேள்விகளைக் கேட்டால், அதற்குப் பதில் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சுமத்தினார்.
ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிடம் மேலும் கேள்வி தொடுத்த ஹர்ஷ சில்வா, பதில் வழங்க ஏன் தயக்கம் என்றும் வினவினார்.
நாடாளுமன்றத்தில் மத்திய வங்கியின் பிரதிநிதிகள் இல்லை என்றும், எதிர்காலத்தில் உரிய அதிகாரிகளை, நாடாளுமன்ற கேள்வி நேரத்தின்போது அனுப்பி வைப்பதாகவும் ஆளுநர் பதிலளித்தார்.
மத்திய வங்கி ஆளுர் என்ற முறையில் அழைத்தால், நேரடியாக சபைக்கு வந்து பதில் வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஆளுநர் கூறினார்.
உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள், மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்களுக்குப் பொருத்தமானதாக இருந்தால், அந்த நிறுவனங்களிடமிருந்து பதில் பெறப்பட்டு உரிய அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் உறுதியளித்தார்.
அதேவேளை, வரவுசெலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் திட்டங்கள் இருப்பதாகவும், அது பற்றி எதிர்க்கட்சிகளுடன் அரசாங்கம் விவாதிக்கும் என்றும் ஆளுநர் மேலும் கூறினார்.

