Wednesday, November 5, 2025 9:21 am
காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக 31 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
இவ்வறிவித்தலை சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் நேற்று அறிவித்துள்ளார்.
31 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்ய இருப்பதாக அரச சட்டத்தரணி சஜித் பண்டார வெளிப்படுத்தியுள்ளார்.
சட்டமா அதிபர் சார்பாக அரச சட்டத்தரணி சஜித் பண்டார உயிர் நீதிமன்றில் முன்னிலையாகி இவ்விடயத்தினை தெளிவுபடுத்தினார்.
கோட்டா கோ கம போராட்டம் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலமும், சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தத் தவறிய பொலிஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் தமது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் தீர்ப்பு வழங்குமாறு கோரி போராட்டக்காரர்கள் குழுவினால் 5 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
குறித்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று இடம்பெற்ற போதே அரச சட்டத்தரணி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்களில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவதாக அரச சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் நடந்தபோது பொலிஸ் செயலற்ற நிலையில் செயற்பட்டதன் காரணமாகவே இந்த துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டதாக மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர்.

