Sunday, November 2, 2025 6:49 pm
தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் இலங்கை தமிழரசு கட்சியின் அழைப்பின் பேரில் மூன்றுநாள் கள விஜயம் ஒன்றினை யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவின் அனுசரணையில் இக்கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
அண்மையில் 14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 பேர் கொண்ட இளம் அரசியல் தலைவர்கள் குழு இந்தியாவிற்கு விஜயம் செய்ததன் தொடர்ச்சியாகவே வடக்கு மாகாண விஜயம் அமைந்துள்ளது.
இந்த விஜயத்தின் போது வடக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கள விஜயங்கள் மேற்கொண்டு இளம் அரசியல் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட உள்ளது.
தமிழரசுக் கட்சியில் உட்கட்சி பிரச்சனை என்பது மிகவெளிப்படையாகவே தெரிகின்ற ஒரு விடயம். கட்சியின் புதிய நிர்வாக தெரிவு நீதிமன்ற உத்தரவு ஒன்றின் ஊடாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் இறுதியில் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டவரும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைந்தவரும், தற்போதை நாடாளுமன்ற குழு தலைவருமான சி.சிறிதரனை இக்கலந்துரையாடலில் காணக்கிடைக்கவில்லை.






இக்கலந்துரையாடலினை பார்க்கின்ற போது அக்கட்சியின் ஒரு தரப்பினரை மட்டும் வைத்துக்கொண்டு கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவே தெரிகின்றது.
இங்கு கூறப்படும் கருத்துக்கள் ஏற்கனவே தென்னிலங்கையுடன் மிகவும் நெருங்கி செயற்படும் தரப்பினருடைய கருத்துக்களாகவே இருக்கும். அவை உண்மையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை வெளிப்படுத்துபவையாக அமையுமா என்பது கேள்விக்கூறியே.
தென்னிலங்கை இளம் அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்படுகின்ற கருத்தக்கள் என்பது தமிழ் மக்களின் தேசிய நீக்க கருத்துக்களாக அமைகின்ற போது அவை தென்னிலங்கையில் எப்படியான விம்பங்களை உருவாக்கும்.


இப்படியான கலந்துரையாடலுக்கு இந்தியா ஏன் அனுசரனை வழங்குகின்றது. இந்தியாவின் செயற்பாடுகள் என்பது தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு விரோதமானவர்களின் கூட்டாகவே பார்க்கப்படுகின்றது.

