Sunday, November 2, 2025 12:39 pm
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் சுமார் மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதி கொண்ட 100 கிலோ எடையுடைய 46 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் கஞ்சா பொதிகள் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
சுப்பர்மடம் கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு ஏற்ப பருத்தித்துறை பொலிஸார் நேற்று சனிக்கிழமை அதிகாலை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சுப்பர்மடம் பகுதியில் நடத்தப்படட தேடுதல் – சோதனையின்போது, பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாக பருத்தித்துறை தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தெரிவித்தார்.
சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை கேரள கஞ்சா பொதிகள் வாகனம் ஒன்றில் பருத்தித்துறை அவ்வொல்லை பகுதிக்கு ஏற்றிச் செல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும், சம்மந்தப்பட்ட இருவர் படகு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வொல்லை பிரதேசத்தில் நடத்திய தேடுதலில், வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 46 கஞ்சா பொதிகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பெண் உட்பட கைது செய்யப்பட்ட நான்குபோரும் இன்று ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். படகும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேறு பொருட்களும் கைப்பற்றப்பட்ட 46 கஞ்சா பொதிகளும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.
விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நீதிமன்ற உத்தரவை பெற்று நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தெரிவித்தார்.

