Sunday, November 2, 2025 12:41 pm
*தமிழ்த்தேசியக் கட்சிகளை தவிர்த்து, தமிழர் தரப்பில் வேறு பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தும் திட்டம் வகுக்கப்படுகிறதா?
ரணில் – மகிந்த ஆகியோரின் ஊழல்மோசடிகளை மறுதிலிக்க முடியாது.
– அ.நிக்ஸன்-
அநுர அரசாங்கத்துக்கு எதிராக கருத்திட்டு வரும் பிரதான எதிர்க்கட்சிகள் பலவீனம் அடைந்துள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு நுகேகொடை நகரில் நடைபெறவுள்ளது.
இந்த எதிர்ப்பு போராட்டத்தில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பங்கெடுக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா அறிவித்திருந்தார்.
அதேபோன்று —
மக்கள் போராட்ட முன்னணியும் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் பங்குகொள்ள முடியாது என்று அறிவித்துள்ளது.
அதாவது —
இலங்கைத்தீவை ஊழல் மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களுக்கு உள்ளாக்கிய முன்னாள் ஆட்சியாளர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது என்பது அவர்களின் வாதமாக உள்ளது.
மக்கள் போராட்ட முன்னணியின் மறுப்பில் நியாயம் உள்ளது.
ஏனெனில் —
ரணில், சஜித், ராஜபக்ச என்ற அரசியல் தலைவர்களின் கீழ் செயற்படும் கட்சிகள் முன்னர் ஆளும் கட்சியாக இருந்தபோது ஒட்டுமொத்த இலங்கைத்தீவின் அரசியல் – பொருளாதாரம் ஆகியவற்றுக்கு கேடுவிளைவித்தனர்.
பொருளாதார நெருக்கடி எழுவதற்கும் இவர்களது கட்சிகளின் 76 வருட ஆட்சிதான் காரணம். இன முரண்பாட்டுக்கு உரிய தீர்வு ஏற்படாமல் வெறுமனெ இனவாதம் பரவுவதற்கும் இவர்கள் தான்
இப் பின்னணியில் —
மக்கள் போராட்ட முன்னணி அவர்கள் நடத்தும் எதிர்ப்பு போராட்டத்தில் பங்குகொள்ள முடியாது என்பது நியாயமானது. அவர்களுடைய அரசு எதிர்ப்பு போராட்டமும் தனித்துவமானது.
ஆனால் —
சஜித், ரணில், ராஜபக்ச என்ற தலைவர்களின் கீழ் செயற்படும் கட்சிகள், தமக்குள் முரண்பட்டுக் கொண்டு அநுர அரசாங்கத்தை எதிர்க்க முடியாது. மக்களுக்கும் இக் கட்சிகளின் கடந்தகால அரசியல் சூழ்ச்சிகள் – ஊழல்கள் தெரியும்.
இப் பின்னணிகளை தமக்குச் சாதகமாக்கி, 2015 இல் மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் தயாரிக்கப்பட்ட ‘ஏக்கிய இராச்சிய’ என்ற புதிய அரசியல் யாப்பு மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதா இல்லையா என்ற இரு வகையான அணுகுமுறைகளுடன் அநுர அரசாங்கம் புதிய வியூகம் ஒன்றை வகுத்து வருகின்றது.
இந்த நிலையில் —
பிரதான எதிர்க்கட்சிகள் தமது பலவீனத்தை மீண்டும் வெளிப்படுத்தி வருகின்றன.
ஆனாலும், மாகாண சபைத் தேர்தல்கள் பற்றிய விடயத்தில் எதிர்க்கட்சிகள் குறிப்பாக சஜித், ரணில், மகிந்த ஆகியோர் ஏறத்தாள அநுர அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகும் தன்மை உண்டு.
ஆனால் சில நாட்களுக்கு முன்னர், மாகாணசபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகள் கடந்த வாரம் முதல் கோர ஆரம்பித்துள்ளன.
ஆனாலும் —
இந்தக் கோரிக்கை பலமானதாக இல்லை.
கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர, ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளை தம் பக்கம் எடுக்கக் கூடிய முறையில் சும்மா ஒப்பாசாரத்துக்காக விடுக்கப்படுகின்ற கோரிக்கையாகவே இதனை அவதானிக்க முடியும்.
இப்பின்னணியில் —
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான மையமாக விளங்கும் ஜேவிபி கொழும்பில் தொடராக நடத்தி வரும் உரையாடலில், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவெடுத்திருப்பதாக தெளிவாக தெரிகிறது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் 13 ஆவது திருத்தச் சட்டம் மூலமான மாகாணசபைத் தேர்தல்களை நடத்துமாறு கோரினாலும், கொழும்பை மையமாக் கொண்ட, எதிர்தரப்பு சிங்கள அரசியல் கட்சிகள் அதற்கு பெரிய அளவில் ஆதரவு வழங்கும் சாத்தியம் இல்லை என்பது, ஜேவிபிக்கும் தெரியாமல் இல்லை.
புதிய அரசியல் யாப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காண முடியும் என ஜேபிவி பலமாக நம்புகிறது.
அநுர அரசாங்கத்தின் அடுத்த வருடத்துக்கான செயற்பாடுகள் குறித்து ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள், குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத தேசிய சபை உறுப்பினர்கள் தீவிரமாக பரிசீலித்து வரும் அதேநேரம், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு போராட்டங்கள் பற்றி பெரிய அளவில் அவர்கள் அச்சம் கொண்டதாக கூற முடியாது.
ஆனால் —
மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் மேலும் ஒத்திவைப்பது குறித்தே அதிகளவில் அவர்கள் சிந்திக்கின்றனர்.
இந்த விவகாரங்கள் உள்ளிட்ட ஒரு வருட ஆட்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், எதிர்கொண்ட சவால்கள், எதிர்காலத்தில் நகர்த்தவுள்ள அரசியல் வியூகங்கள் பற்றி ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையில் தேசிய சபை உறுப்பினர்கள் மிகத் தீவிரமாக உரையாடுகின்றனர்.
அதேநேரம் —
தமிழ்த்தேசிய கட்சிகள், குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வகுக்கும் தமிழர் தரப்பு நிலைப்பாடுகள் பற்றியும் ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்திருக்கின்றனர்.
குறிப்பாக –
தமிழ்த் தேசியக் கட்சிகள் தவிர்ந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகள், கல்வியாளர்கள் போன்றவர்களை அழைத்து இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேசும் திட்டம் ஒன்று ஜேவிபியிடம் இருப்பதாக தெரிகிறது.
அதேநேரம் —
கடந்த செப்ரெம்பரில் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற உரையாடலின் தொடர்ச்சியாக மற்றொரு உரையாடலை நடத்தி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமிழர் பிரதிநிதிகள் என்ற ஒரு கட்டமைப்பை தமக்கு ஏற்ற மாத்திரி உருவாக்கும் திட்டமும் இருப்பதாக அறிய முடிகிறது.
ஆனாலும் —
சுவிஸ்லாந்தில் நடந்த உரையாடலில் பங்குபற்றிய தமிழ்த்தரப்பின் கருத்துக்களுடன் ஒத்துப்போக முடியாது என ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் தெளிவாக கூறுகின்றனர்.
இதன் காரணமாக சுவிஸ்லாந்திலோ அல்லது வேறொரு நாட்டிலோ மற்றொரு சந்திப்புக்கு அதாவது விரிவான உரையாடலுக்கு அநுர அரசாங்கம் இணங்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூற முடியாது.
ஆனாலும் —
மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், புதிய யாப்பு எனவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றி நாடாளுமன்ற ஆட்சி முறையை கொண்டு வரும் ஏற்பாடும் அடுத்த ஆண்டு சூடு பிடிக்கும் என ஜேபிவி தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டம் வெற்றியளிக்காமல் பிசுபிசுக்குமானால், அநுர அரசாங்கத்தின் மேற்படி இரண்டு அணுகு முறைகளும் 2026 ஆம் ஆண்டு வெற்றியளிக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாகவே உள்ளன.
குறிப்பாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் புதிய யாப்பு அதாவது ‘ஏக்கிய இராச்சிய’ என்ற அந்தக் கதை நீடித்துச் செல்லக் கூடிய சூழலும், அதன் மூலம் தமிழரசுக் கட்சி தமது செல்வாக்கை நிலை நிறுத்தக் கூடிய வாய்ப்பும் உண்டு.
புதிய யாப்பு விவகாரம் குறித்து தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அத்துடன் —
வடக்கு கிழக்கு இணைப்பு, சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்றெல்லாம் தமிழர் தரப்பு பேசி வருவதை தடுக்கும் திட்டங்களும் வடக்கு கிழக்கில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தமிழ் உறுப்பினர்கள் மூலம் காய் நகர்த்தப்பட்டு வருகிறது.
ஜெனிவா மனித உரிமை சபையின் தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே நிறைவேற்றி வருவதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பில் உள்ள சுவிஸ்லாந்தில் உள்ள தூதுவரை சந்தித்து உரையாடியுள்ளார்.
தமது கட்சி சார்பில் வடக்கு கிழக்கில் எட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும், ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் செல்வாக்கு இழந்து வருவதாகவும் இலங்கை வெளியுறவு அமைச்சு கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுக்கு விளக்கம் கொடுத்து வருகிறது.
சர்வதேச மட்டத்தில் இப் பிரச்சாரம் மிக நுட்பமாக முன்னெடுக்கப்படுகிறது. வத்திக்கான வெளியுறவு அமைச்சர் பேராயர் பவுல் றிச்சார்ட் கல்லேகர் (Paul Richard Gallagher) எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்புக்கு வருகை தரவுள்ள இரகசியத்தின் பின்னணியும் இதுதான்.
அதாவது —
இலங்கைத்தீவு மக்கள் ஒற்றுமையாக ஓர் அணியில் நிற்கிறார்கள், போருக்குப் பின்னரான சூழலில் மீள் நல்லிணக்கம் உறுதியாகிவிட்டது என்ற இறுதிச் செய்தி உலகத்துக்குப் போய் சேரும்.
அ.நிக்ஸன்-

