Saturday, November 1, 2025 10:07 pm
பாதுகாப்புக்கு துப்பாக்கிகளை வழங்குமாறு 20க்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கிகள் வழங்குவது தொடர்பில் சபாநாயகர் பாதுகாப்பு அமைச்சுக்கு கோரிக்கை விடுக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபர் தலமையில் நாடாளுமன்றில் நேற்றைய தினம் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
அக்கூட்டத்தில் துப்பாக்கிகளை வழங்குவது தொடர்பாக ஆராய்வதாக சபாநாயகரும், பொலிஸ்மா அதிபரும் தெரிவித்ததாக கூறப்படுவதை வைத்தே இச்செய்திகள் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிகளை வழங்குவது தொடர்பிலான எந்த கோரிக்கைகளும் பாதுகாப்பு அமைச்சுக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர சிங்கள ஊடக ஒன்றுக்கு இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நாட்டின் தேசிய மற்றும் பொது மக்களின் பாதுகாப்புகளுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. அதேபோன்று, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவ்வாறான அச்சுறுத்தல்கள் இல்லை. இதுவரை அவ்வறான நிலைமை இல்லாத காரணத்தினால் துப்பாக்கிகளை வழங்குதற்கான தேவையில்லை என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

