Saturday, November 1, 2025 9:11 am
வடக்கு கிழக்கில் ஈழத் தமிழர்களின் மரபுரிமைகள் மாற்றியமைக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படுவதாக பௌத்த தேரர் ஒருவர் தன்னிடம் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளதாக, தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் திட்டமிட்ட முறையில் பௌத்த விகாரையை அமைத்து, அதனை தொல்பொருள் பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டமை நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்ற இரகசியத்தை, மிஹிந்தலையில் உள்ள விகாராதிபதி ஒருவர் தன்னிடம் வெளிப்படுத்தியதாக சாணக்கியன் தெரிவித்திருக்கிறார்.
அதாவது செயற்கையான முறையில் குருந்தூர் மலையில் பௌத்த தொல்பொருள் சின்னங்கள் பதிக்கப்பட்டதாக மிகுந்தலை விவகாராதிபதி சுட்டிக்காட்டியதாக சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
குருநாகல் மிஹிந்தலை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை சாணக்கியன் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து உரையாடியபோது, இந்த இரகசியங்களை தேரர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
தொல்பொருள் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளராக பதவி வகித்திருந்த ஜயதிலக்க என்ற அதிகாரி ஒருவர் பௌத்த மதத்தோடு சம்பந்தப்பட்ட சின்னங்களை மூடைகளில் கொண்டுவந்து சுற்றியுள்ள நிலங்களிலும் வயல் நிலங்களில் வீசி அவற்றை தொல்பொருள் நிலங்களாக ஆவணப்படுத்தி தொல்பொருள் திணைக்களம் கையப்படுத்தியதாகவும் தேரர் கூறியிருக்கிறார்.
ராஜபக்சக்களின் ஆட்சிக்காலத்தில் தான் இவ்வாறு நன்கு திட்டமிட்ட செயற்கை முறையிலான பௌத்த மயமாக்கல் இடம்பெற்றது என்றும் இது பற்றி குற்றப் புலனாய்வு பொலிஸாரிடம் முறையிட்டுள்ளதாக கூறிய தேரர் அந்த முறைப்பாட்டு ஆவணங்களை தன்னிடம் தேரர் கையளித்துள்ளார் எனவும் சாணக்கியன் முகநூல் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதேபோன்று தான் வடக்கு கிழக்கில் தமிழர்களின் பிரதேசங்களில் பௌத்த மயமாக்கல் இடம்பெற்றிருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.

