Saturday, November 1, 2025 2:54 pm
இத்தாலி அரசின் தனி இராஜ்ஜியம் எனப்படும் வத்திக்கான் நகரின் வெளிவிவகார அமைச்சர் பேராயர் பவுல் றிச்சார்ட் கல்லேகர் (Paul Richard Gallagher) எதிர்வரும் 3 ஆம் திகதி கொழும்புக்கு வருகிறார்.
எதிர்வரும் 8 ஆம் திகதி வரை கொழும்பில் தங்கியிருப்பார். இப்பயணம் வத்திக்கான் – இலங்கை உறவை வலுப்படுத்தும் என்றும், போரின் பின்னரான நல்லிணக்கத்தை மேலும் ஊக்குவிக்கும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அழைப்பில், இலங்கைக்கும் புனித சீசனுக்கும் (Holy See’s) (வத்திக்கான்) இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இப் பயணம் அமைவதாகவும் வெளிவிவகார, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பேராயர் கல்லேகர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் மனிதாபிமான முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
கொழும்பு காலி முகத்திடலில் ஹோட்டலில் இடம்பெறும் நினைவு வைபவம் இப் பயணத்தின் முக்கிய அம்சமாகும். இது வத்திக்கானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த நட்புறவை பிரதிபலிக்கும் வகையில் பேராயர் கல்லேகர் சிறப்புரை நிகழ்த்துவர்..
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உள்ளான தேவாலயங்களை பார்வையிடுவார். பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திப்பார்.
அதேநேரம், பேராயர் கல்லேகர் யாழ்ப்பாணத்துக்கும் பயணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

