Friday, October 31, 2025 12:48 pm
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான மின்கட்டமைப்பு இணைப்புத் திட்டத்தை (Power Grid Interconnection) செயல்படுத்துவது தொடர்பான நடைமுறைகளை விவாதிப்பதற்காக நேற்று ஒரு மெய்நிகர் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இலங்கைக் குழுவிற்கு இலங்கை அரசின் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால தலைமை தாங்கினார். இந்தியக் குழுவிற்கு இந்திய அரசின் மின்சாரத் துறைச் செயலாளர் ஸ்ரீ பங்கஜ் அகர்வால் தலைமை தாங்கினார்.
இருதரப்பு அதிகாரிகளும் மின்கட்டமைப்பு இணைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அம்சங்கள் குறித்து ஆலோசித்தனர்.
மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் இலங்கையால் இந்தியாவில் இருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்ய முடியும். உபரியாக இருக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை (Renewable Energy) ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கை அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். ஏற்றுமதிகள் மற்றும் எரிசக்தி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்தவும், மின்கட்டமைப்பின் நிலைத்தன்மையை (Grid Stability) மேம்படுத்தவும், பிராந்திய மின் சந்தையில் ஒருங்கிணைக்கவும் புதிய வாய்ப்புகளை இந்தத் திட்டம் உருவாக்கும்.
இந்த முக்கியத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவது குறித்து இருதரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின் பரிமாற்ற இணைப்பினால் இலங்கையானது பல்வேறு நன்மைகளை அடையக்கூடிய வாய்ப்புக்கள் உருவாகும் என கூறப்படுகின்றது.


