Thursday, October 30, 2025 7:41 pm
இந்தியாவின் மும்பாய் நகரின் போவாய் பிரதேசத்தில், 17 சிறுவர்களை பணயக் கைதியாக வைத்திருந்த தொழில் அதிபர் ஒருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக பிரிசி நியூஸ் (ptcnews) என்ற இந்திய ஆங்கில செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை பிற்பகல் இச் சம்பவம் இடம்பெற்றதாக அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நிகழ்வு ஒன்றை நடத்தவுள்ளதாகக் கூறி சிறுவர்களை வழவழைத்த அந்த நபர், சில கோரிக்கைகளை முன்வைத்து சிறுவர்களை பணயக் கைதிகளாக வைத்திருந்ததாக பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர்.
ரோஹித் ஆர்யா எனப்படும் தொழில் அதிபர், தனது கோரிக்கைகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார். சில முக்கியமான கோரிக்கைகள், குறிப்பாக குறிப்பிட்ட சில நபர்களிடம் தான் பேச வேண்டும் எனவும், அவர்கள் தன்னை சந்திக்க மறுத்தால் 17 சிறுவர்களுக்கும் ஆபத்து நேரிடும் எனவும் அக் காணொளியில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து, சிறுவர்களின் பெற்றோரும், உறவினர்களும், பொது மக்களும் போவாய் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு உதவி கோரினர். உடனடியாக அந்த இடத்திற்கு சென்ற பொலிஸார், மூடிய அறைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டனர்.
ஆனால் அந்த தொழில் அதிபர் அதற்கு இணங்கவில்லை. இதனால் பெருமளவு பொலிஸார் அப் பகுதியில் குவிக்கப்பட்டனர். பொதுமக்களும் சம்பவ இடத்தில் ஒன்று கூடினர்.
சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கழிவறையின் யன்னல் ஊடாக உள் நுழைந்த பொலிஸார், தொழில் அதிபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சம்பவ இடத்தில் அவர் பலியானார்.
அதனையடுத்து அறைக்குள் சென்ற பொலிஸார், 17 சிறுவர்களையும் பாதுகாப்பாக மீட்டனர். சிறுவர்களுடன் இருந்த வயதான நபா் ஒருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். சிறுவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். குறித்த தொழில் அதிபர் மும்பாயின் புனே பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறினார்.

