Thursday, October 30, 2025 2:58 pm
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தென் கொரியாவில் நேற்று புதன்கிழமை பகல் சந்தித்து உரையாடியுள்ளனர். சமீபத்திய பிரதான விவகாரமான அரிய மண் தாதுக்கள் வழங்குவது தொடர்பாக சர்ச்சை தீர்க்கப்பட்டு விட்டதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக த கார்டியன் (the guardian) என்ற ஆங்கில செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
இச் சந்திப்பு அற்புதமானது என்று விமர்சித்துள்ள ட்ரம்ப், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் செல்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இருவரும் சந்தித்துப் பேசிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்துக் கூறினார். அமெரிக்க – சீன அரசியல், பொருளாதார போட்டிகளுக்கு மத்தியில் இடம்பெற்ற இச் சந்திப்பு வர்த்தக ரீதியான முன்னேற்றத்துக்கு வழி வகுத்துள்ளது என்று த கார்டியன் செய்தித் தளம் வர்ணித்துள்ளது.
ரசிய – உக்ரைன் சமதான விவகாரத்தில் இணைந்து பணியாற்ற சீனா ஒப்புக் கொண்டதாக ட்ரம்ப் கூறினார். போர் ஒரு பிரச்சினையாக மிகவும் வலுவாக எழுந்தது என்றும் கூறினார்.
அதே நேரம், சீனா நிறைய ரசிய எண்ணெயை கொள்வனவு செய்கிறது என்பதை ட்ரம்ப் ஒப்புக் கொண்டார், ஆனாலும் அது பற்றி இன்றைய சந்திப்பில் விவாதிக்கப்படவில்லை என்றும் ட்ரம்ப் கூறினார்.
அதே போன்று தைவான் விவகாரம் பற்றியும் சந்திப்பில் உரையாடவில்லை என்றும், தைவான் நாட்டை சீனா தனக்குரியதாக்கும் கருத்தியல் பற்றி ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். அக் கருத்தியலை ஏற்க முடியாது என்ற தொனியை டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படுத்தினார்.
அதேநேரம் சீனப் பொருட்கள் மீதான வரியை 10 சதவீதம் குறைத்துள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். முன்னர் 57 சதவீதமாக இருந்த வரி தற்போது 47 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஆனாலும் இச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லை. இதுவரை சந்திப்பு தொடர்பாக சீனா அதிகார பூர்வமாக கருத்து வெளியிடவும் இல்லை.
தென் கொரியாவில் இடம்பெற்ற சர்வதேச உச்சி மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட பின்னரே இரு தலைவர்களும் சந்தித்து உரையாடியுள்ளனர்.
இச் சந்திப்பில் உயிருக்கு ஆபத்துகளை ஏற்படுத்தும் சீன மருந்து உற்பத்திகள் பற்றி டொனால்ட் ட்ரம்ப், ஜி ஜின்பிங்கிடம் எடுத்துக் கூறியதாகவும், அந்த வகை மருந்து உற்பத்திகள் செய்யப்படுவதை நிறுத்த அவர் ஒப்புக் கொண்டதாகவும் ரொய்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பூசன் நகரில் இருவரின் உரையாடல்கள் மூன்று அல்லது நான்கு மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு மணி நேரம் 40 நிமிடங்களில் உரையாடல் முடிவடைந்துள்ளதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை, தென் கொரியாவில் நடந்த ஒரு உச்சி மாநாட்டின் பின்னர் டொனால்ட் ட்ரம்ப், தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் குடன் கலந்துரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள சிக்கல்கள் – முரண்பாடுகள் இரு தலைவர்களும் விரிவாக உரையாடியதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

