Thursday, October 30, 2025 10:59 am
போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக, அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்று வியாழக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், பொதுப் பாதுகாப்புக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், பொலிஸ் மற்றும் முப்படையினர் மற்றும் சுமார் 50 வெளிநாட்டுத் தூதுவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இலங்கையின் இளம் சமுதாயம் மற்றும் பாடசாலை மாணவர்களின் வாழ்வைப் பாதிக்கும் விஷ போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் படி பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பொலிஸ், முப்படையினர், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் உட்பட பல அமைப்புகள் இன்று முதல் இணைக்கப்படவுள்ளது.
இலங்கை மட்டுமன்றி, உலகளவிலும் பெரிதும் பேசப்படும் ஒரு விடயமாக போதைப்பொருள் மாறி வருகின்றது. போதைப்பொருளை முறியடிக்கும் நடவடிக்கைகளில், வல்லரசு நாடான அமெரிக்கா உட்பல பல முக்கிய நாடுகள் களமிறங்கியுள்ளன. குறிப்பாக பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ ( Rio de Janeiro) என்ற மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், விற்பனையாளர்கள் ஆகியோரை கைது செய்யும் இராணுவ நடவடிக்கைகளின் போது 132 பேர் கொல்லப்பட்டதாக பிரித்தானிய ஆங்கில ஊடகமான இன்டிபென்டன்ட் (independent) நேற்று புதன்கிழமை, செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இலங்கையும் தற்போது, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

