Thursday, October 30, 2025 10:48 am
தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சவில்லை. கடந்த ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் தான் மாகாணசபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி எதிரணிகள் ஓரணியில் திரளவுள்ளன. நுகேகொடையில் இருந்து தான் மஹிந்த சூறாவளி கூட ஆரம்பமானது. 21 ஆம் திகதி பேரணி குறித்து அரசு அஞ்சுகின்றதா! என எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிரணி கூட்டணியானது அரசாங்கத்துக்கு எவ்வித சவாலும் அல்ல எனவும் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அஞ்சவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டு வருகின்றது. அதே போல அரசியல் வாதிகளின் சொத்து குவிப்பு பற்றியும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் சில எதிரணி உறுப்பினர்கள் பீதியடைந்துள்ளனர்.
இவ்வாறானவர்கள் இணைந்து அமைப்பது எதிரணி கூட்டு கிடையாது. அவ்வாறான கூட்டணி அரசுக்கு சவாலாகவும் அமையாது. ஒன்று சேர்வதற்குரிய உரிமை உள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் ஒன்று கூடலாம். கருத்து வெளியிடும் சுதந்திரமும் உள்ளது. அந்த சுதந்திரத்தையும் பயன்படுத்தலாம். எது எப்படி இருந்தாலும் பீதியால் தான் மேற்படி கூட்டம் நடத்தப்படுகின்றது.
நாம் எந்தவொரு தேர்தலையும் பிற்போடவில்லை. எந்நேரத்திலும்இ எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு நாம் தயார்”- என்றார்.

