Wednesday, October 29, 2025 12:33 pm
மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் இரகசியமாக பதுங்கியுள்ள பாதாள உலக குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை இலங்கைக்கு கொண்டு வந்து சட்ட நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அமைச்சர் இத் தகவலை வெளியிட்டார்.
அந்த நேர்காணலில் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தாவது,
பாதாள குழுவின் மூலமான போதைப் பொருள் கட்டத்தல்காரர்கள் பலர் டுபாயில் தங்கியுள்ளனர். வேறு சிலர் வெளிநாடுகளின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் தெற்காசிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரையும் சட்டரீதியாக இலங்கைக்கு கொண்டு வருவதற்குரிய இராஜதந்திர நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
குற்றச் செயல்களில் ஈடுபட்ட 216 பேருக்கு எதிராகச் சிவப்புப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 82 பேரே பாதாள குழுவுடன் தொடர்புடையவர்கள். பாதாள குழுவைச் சேர்ந்தவர்களில் 17 பேர் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு விட்டு வெளிநாடுகளில் பதுங்கி வாழ்வதற்கு இடமளிக்க வேண்டாமென சில நாடுகளிடம் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நீதி அமைச்சின் ஒத்துழைப்புடன் வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள அனைத்து குற்றவாளிகளும் இலங்கைக்கு கொண்டு வருவாா்கள். 2026 ஆம் ஆண்டுக்குள் இதனை செய்து முடிக்கவுள்ளதாக அமைச்சர் விபரித்தார்.
அதேவேளை மற்றொரு கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சர், செவ்வந்தி உரிய முறையில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கைதிகளுக்குரிய அதுவும் பெண் கைதிகளுக்கான சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் எடுத்துக் கூறினார்.

