Wednesday, October 29, 2025 11:28 am
சமதான ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியமைக்கு ஐரோப்பிய நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளன. தொடர்ச்சியாக போரை நடத்த வேண்டாம் எனவும் காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் – உதவிகளை வழங்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கேட்டுள்ளதாக ரொய்டர் (Reuters) என்ற அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமதான ஒப்பந்தத்தின் பின்னர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உத்தரவை அடுத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வடைந்துள்ளதாக ரொய்டர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, சமாதான ஒப்பந்தத்தை செய்துவிட்டு, பாலஸ்தீனத்தை முற்றாக அழிக்கும் திட்டம் இருப்பதாக ஹமாஸ் இயக்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. ஹமாஸ் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்களை அல் ஜசிரா (Al Jazeera) என்ற மத்திய கிழக்கு ஆங்கில தொலைக்காட்சி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் வடக்கு மற்றும் தெற்கு காசாவில் நடத்திய தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டும் மேலும் பலர் காயமடைந்துமுள்ளனர். மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் மீண்டும் இடம்பெயர ஆரம்பித்தள்ளதாகவும் பாலஸ்தீன செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் இயக்கம் போர் நிறுத்த விதிகளை மீறியதால் தாக்குதல் நடத்தியதாக நெதன்யாகு குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால் இக் குற்றச்சாட்டை ஹமாஸ் இயக்கம் மறுத்துள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை, இஸ்ரேல் அரசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹமாஸ் இயக்கத்துக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப், போர் நிறுத்த விதிகளை மீறினால் ஹமாஸ் இயக்கம் அழிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பிபிசி (BBC) ஆங்கில உலக செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதை கண்டித்துள்ள ஹமாஸ் இயக்கம், இஸ்ரேல் அரசு வேண்டுமென்றே போரை தம் மீது திணிப்பதாகவும், அது பற்றி அமெரிக்கா பகிரங்கமாக கண்டிக்க வேண்டும் எனவும் ஹமாஸ் கேட்டுள்ளது.

