Tuesday, October 28, 2025 4:23 pm
அரச சேவையின் ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்வதற்காகப் பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன் மூலம், பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளில் நிலவி வந்த 8,547 பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய அந்தந்த நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 2 ஆம் திகதியன்று சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் கீழ் 5,198 வெற்றிடங்கள் (காவல்துறை ஆட்சேர்ப்புக்கள் உட்பட) நிரப்பப்படவுள்ளன.
இதைத் தொடர்ந்து மேல் மாகாண சபை (414), இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சு (355),புத்தசாசன, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு (310) ,சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு (1,261) ஆகியவற்றிலும் கணிசமான எண்ணிக்கையிலான ஆட்சேர்ப்புக்கள் இடம்பெறவுள்ளன.
இந்த ஆட்சேர்ப்புகள் அரச சேவையின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளைக் கருத்தில் கொண்டு விரைவாக மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

