Tuesday, October 28, 2025 2:37 pm
மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கினால் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மாகாணசபைத் தேர்தலானது காலவரையரையின்றி பிற்போடப்பட்டமைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு காரணமல்ல. நாடாளுமன்றத்தில் தேர்தல்கள் முறை தொடர்பில் இயற்றப்பட்ட சட்டமுறைமையே காரணமாகும். மாகாணசபைத் தேர்தலினை எந்தமுறையில் நடாத்துவது என்பது குறித்து சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல் குறித்து வியாக்கியானம் கோரப்பட்டபோது நாடாளுமன்றத்திலேயே இதற்கான தீர்வினை பெற்றுக்கொள்முடியும் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இந்த அரசு மாகாணசபைத் தேர்தலை நடாத்துவது குறித்து எந்தவித அக்கறையினையும் காட்டாதுள்ளது.
அதேநேரம் மாகாணசபை அதிகாராங்களை அரசாங்கம் தனது நேரடி பிரதிநிதிகளான ஆளுனர்களின் கீழ் கொண்டுசெயற்படுகின்றமையானது ஜனநாயக அம்சங்களுக்கு முரணானது. எனவே அரசாங்கம் மாகாணசபைத் தேர்தல் குறித்த சட்டசிக்கல்களுக்கு தீர்வினை கண்டு ஒத்துழைப்பினை வழங்கினால் அடுத்த ஆண்டின் காலாண்டிற்குள் தேர்தலை நடாத்த முடியும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் , உள்ளூராட்சிசபைத் தேர்தல் என்பன நடைபெற்று முடிந்தாலும் மாகாணசபைத் தேர்தலானது கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

