Tuesday, October 28, 2025 11:04 am
வாகனங்களுக்கு 15 சதவீத வரி விதிக்க அரசாங்கம் முன்மொழிந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள அனைத்து வாகன வகைகளின் விலைகளும் கட்டுபடியாகக்கூடிய வரம்புகளுக்கு அப்பால் அதிகரிக்கக்கூடும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (Vehicle Importers Association of Sri Lanka – VIASL) தலைவர் பிரசாத் மேனேஜ் (Prasad Manage) எச்சரித்தார்.
ஊடகங்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை கருத்து வெளியிட்ட மேனேஜ் , 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னர் வாகன விலை அதிகரிப்புகள் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.
அனைத்து நுகர்வு வரிகளையும் கழித்த பின்னர், ஏற்றுமதி செய்யும் நாட்டில் வாகனத்தின் மதிப்பின் அடிப்படையில் வாகன இறக்குமதி வரிகள் கணக்கிடப்படுகின்றன என்று அவர் விளக்கமளித்தார்.
இறக்குமதியாளர்களுக்கு தற்போது மொத்த விலையில் 15 சதவீத விலைக்கழிவு கிடைக்கிறது. அதாவது புதிய வாகனம் ஒன்றில் மதிப்பில் 85 சதவீதம் மட்டுமே வரிக்கு உட்பட்டது. ஆனால் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னர் இந்த 15 சதவீத விலைக்கழிவு நீக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக மேனேஜ் கூறினார்.
விலைக் கழிவு முறை நீக்கப்பட்டால், ஜப்பானில் தயாரிக்கப்பட்ட குறைந்த விலை அல்டோ முதல் உயர் ரக வகையிலான வாகனங்கள் வரை விலைகள் கணிசமாக உயரும் என்று அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் விலைக்கழிவு முறையை தவறாகப் பயன்படுத்துகின்றது என்றும், இறக்குமதியாளர்கள் புத்தம் புதிய வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, இயல்பாகவே 15 சதவீத விலைக் கழிவு கிடைக்கும் எனவும் அவர் விளக்கினார்.
இறக்குமதி செய்யப்படும் வாகனச் சந்தையிலும் கணிசமான விலை உயர்வுகள் ஏற்படக்கூடும் என்று மேனேஜ் மேலும் கூறினார். வரி அதிகரிப்பு குறித்து அரசாங்கம் இறுதி முடிவை எடுக்கவில்லை, ஆனால் அதிகாரிகளிடமிருந்து வந்த தகவல்களின் அடிப்படையில், இந்த விலை அதிகரிப்பு அறிவிப்பை வெளியிடுவதாகவும் அவர் கூறினார்.

