Tuesday, October 28, 2025 9:45 am
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு தொகை ஹஷிஸ் (Hashish) எனப்படும் போதைப்பொருளை கடத்த முயன்ற போது, 21 வயதான கனேடிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
182.5 மில்லியன் பெறுமதியான ஹஷிஸ் என்ற போதைப்பொருளை கடத்த இவர் முற்பட்டுள்ளார்.
இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை விமான நிலையத்தின் பச்சை ஒளிவிளக்கு (Green Channel) வழியாக தான் வைத்திருக்கும் பொருட்கள் பற்றிய தகவலை அறிவிக்காமல் செல்ல முயன்ற போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், பல்கலைக்கழக மாணவர் எனத் தெரிவிக்கப்படுகிறது, இவர் நள்ளிரவில் டுபாயிலிருந்து எமிரேற்ஸ் விமானத்தில் இலங்கைக்கு வந்துள்ளார். சோதனையில், சுங்க அதிகாரிகள் அவரது பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18.253 கிலோகிராம் ஹஷிஷ் போதைப் பொருளை கண்டுபிடித்தனர்.
கைதான கனேடிய பிரஜை, கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் சுங்க அதிகாரிகளினால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

