Tuesday, October 28, 2025 9:41 am
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் சபையிலும், ஜெனீவா மனித உரிமைச் சபையிலும் முறையிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரான மரிக்கார், அநுர அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இலங்கைத்தீவில் நூற்றுக்கும் மேற்பட்ட படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அரச அலுவலகங்களுக்குள் துப்பாக்கிதாரிகள் துணிவுடன் புகுந்து மக்கள் பிரதிநிதிகளை சுட்டுக்கொல்லும் அளவுக்கு நிலைமை ஆபத்தாகவுள்ளது என்றும் கூறினார்.
போதைப்பொருள் குழுக்கள் பாதாளக் குழுக்களை ஒழிப்பதாக கூறிக் கொண்டு, மக்கள் பிரதிநிதிகள் மீது அரசியல் பழிகளைச் சுமத்தி, அவர்களை பாதாள உலக குழுக்களுடன் தொடர்புபடுத்தி பிரச்சாரம் செய்வதாகவும் கூறிய மரிக்கார், படுகொலைகளை நியாயப்படுத்த போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாகவும் கவலை வெளியிட்டார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், அரசாங்கம் முன்னெடுத்துள்ள போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை ஆதரிக்கிறோம். குற்றச் செயல்கள் தடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இதில் எதிர்க்கட்சிகளுக்கு மாற்றுக் கருத்தில்லை என்றார்.
ஆனால், கொல்லப்படும் மக்கள் பிரதிநிதிகள் மீது, தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும் மரிக்கார் கூறினார்.
அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்களையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்று சுட்டிக்காட்டினார்.

