Tuesday, October 28, 2025 9:38 am
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜேர்மன் தொழிற் பயிற்சி நிலையத்தின் உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த போராட்டத்தில், உப அதிபர் மாணவர்களின் நலன் கருதி அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒருவர் என்றும், இதனை புரிந்துகொண்டு அவருடைய இடமாற்றம் இரத்துச் செய்யப்பட வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தினர்.
உப அதிபர் ஓய்வு வயதையும் கடந்து அர்ப்பணிப்புடன் கடமையாற்றிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது மனவருத்தமாக உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சுட்டிக்காட்டினர்.
மாணவர்களின் நலன் கருதி உப அதிபரின் இடமாற்றத்தை தற்காலிகமாகவேனும் நிறுத்த வேண்டும் என்று மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதேவேளை, தொழில்நுட்பக் கல்லூரிகளின் விதிகளின் பிரகாரம் உப அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், அதனை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ள நிர்வாகம், மாணவர்களின் நலன்கள் பாதிக்கப்படாத முறையில் கல்விச் செயற்பாடுகள் அமையும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

