Monday, October 27, 2025 2:29 pm
சீரற்ற காலநிலை காரணமாக , நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாகச் சுகாதார நிபுணர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மழைநீர் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதால், டெங்கு, லெப்டோஸ்பிரோசிஸ் (leptospirosis), ஹெபடைடிஸ் ஏ (hepatitis A), டைபாய்டு (typhoid) மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் வேகமாகப் பரவக்கூடும் என்று மூத்த ஆலோசக மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம ஆங்கில ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் நுளம்புகளின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற இடங்களாக மாறும் எனவும் வெள்ள நீர் விலங்குகளின் சிறுநீருடன் கலந்து, லெப்டோஸ்பிரோசிஸ் அல்லது எலிக் காய்ச்சல் பரவ வழிவகுக்கும் என்றும் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளம் அல்லது சேறு நிறைந்த பகுதிகளில் வேலை செய்பவர்களும் ,நடந்து செல்பவர்களும் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் பாதணிகள் (Boots), கையுறைகள் மற்றும் பாதுகாப்பு ஆடைகளை அணிய வேண்டும் எனவும் மேலும் காய்ச்சல், தலைவலி, சளி அல்லது தசை வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும், எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வெள்ளத்தின் போது மக்கள் பெரும்பாலும் கிணறுகள் அல்லது ஓடைகளிலிருந்து அசுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள், இது இந்த தொற்றுநோய்களின் அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது, என்று மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
எனவே நுளம்பு உற்பத்தியைக் குறைக்க குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தவும், சாப்பாட்டுக்கு முன் கைகளைக் கழுவுதல், கொதிக்க வைத்த தண்ணீரைக் குடித்தல், உணவை மூடி வைத்தல், சேற்று அல்லது தேங்கி நிற்கும் தண்ணீரைத் தவிர்ப்பது போன்ற எளிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

