Sunday, October 26, 2025 9:55 pm
மாத்தறை மாவடடம் வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்ரமசேகர படுகொலையில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும், ஒருவர் மஹரகம நாவின்ன பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பிரதான குற்றவாளி என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகின்றது.
லசந்த விக்ரமசேகர எனப்படும் “மிதிகம லசா” என்ற 38 வயதுடை தவிசாளர், அலுவலகத்துக்குள் வைத்து சென்ற 23 ஆம் திகதி புதன்கிழமை கொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வு பொலிஸார், கொலையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் துறையும், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து நடத்திய நடவடிக்கையில், துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேல்மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவும் அரச நுண்ணறிவு சேவையும் வழங்கிய ஒத்துழைப்பின் மூலம் இக் கைது இடம்பெற்றுள்ளது. இதேவேளை மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக இன்று வரை நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணைகள் தொடர்கின்றன.

