Sunday, October 26, 2025 7:19 pm
வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைதீவு முழுவதிலும் 17 ஆயிரம் குழந்தைகள், பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய ஆபத்தான நிலையில் இருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சகல குழந்தைகளையும் பாதுகாக்கும் திட்டம் இருப்பதாகவும் பொருத்தமான செயன் முறைகளை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சிறுவர்கள் பற்றிய நிகழ்வில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஆனந்த விஜேபால, அரசாங்கம் சகல மட்டங்களிலும் குழந்தைகளை கவனித்து வருதாகவும் தெரிவித்தார்.
இலங்கையின் எதிர்கால சந்ததியினர் வாழ்வதற்கு ஏற்ற ஒரு நாட்டையும், அதற்குரிய பாதுகாப்பையும் உருவாக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா தலைமையிலான அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.
இன மத வேறுபாடுகள் இன்றி எந்தவொரு குழந்தையையும் கைவிடாமல் ஒவ்வொரு குழந்தையின் சமூக பாதுகாப்பையும் உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் விபரித்தார்.
சிறுவர் முதியோர் பாதுகாப்பு, அவர்களுக்கான சுகாதார பரிமரிப்பு ஆகியவற்றுக்கான புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். எதிர்காலத்தில் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் முதியோருக்கு ஆபத்தான சூழல்கள் உருவாகாது எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

