Saturday, October 25, 2025 10:09 am
சீன – இந்திய உறவு சமீபகாலமாக அரசியல் – பொருளாதார முரண்பாட்டில் ஓர் உடன்பாடாக மாறி வரும் சூழலில், இந்தியாவுக்கு மிக அருகே சீனா புதிய ஏவுகணை மையங்களை அமைத்து வருவதாக சாட்டிலைட் படங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்தியருடே (indiatoday) என்ற ஆங்கில செய்தித் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதி திறன் கொண்ட வான் எச் கியு எனப்படும் ஏவுகணைத் தளங்களையே (HQ-9 Air Missile – SAM) கூடுதலாக சீனா அமைத்துள்ளதாக அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய மத்திய அரசு இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல்களை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு எல்லை பகுதியான கல்வான் மோதல் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இரு நாடுகளின் இராணுவத்துக்குப் பெரும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன. இதனையடுத்து எல்லைப் பகுதிகளில் பெருமளவு இராணுவத்தை சீன – இந்திய அரசுகள் குவித்தன.
இந் நிலையில் சில உடன்பாடுகளோடு மோதல் முடிவுக்கு வந்தது. ஆனாலும் தற்போது திபெத்தின் பாங்காங் ஏரியின் கிழக்குக் கரையில் புதிய கட்டுமானப் பணிகளை சீனா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட அதிநவீன HQ-9 வான் ஏவுகணைகளை, சீனா, மிக இரகசியமாக பதுக்கி வைத்திருக்கக் கூடும் என்றும் இந்திய இராணுவத் தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் புவி-புலனாய்வு நிறுவனமான ஆல்சோர்ஸ் பகுப்பாய்வு (Geo-Intelligence Firm AllSource Analysis) ஆய்வு நிறுவனம் ஒன்று, இந்திய எல்லையில் மிக அருகாக ஏவுகணைகள் மற்றும் நவீன ரக ஏவுகணைகளை பொருத்தியுள்ளதாக இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய சீன எல்லையில் இருந்து 65 கி.மீ தொலைவில் ஏவுகணை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இந்த அமெரிக்க நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்தியாவின் நியோமா விமான நிலையத்திற்கு நேர் எதிரே இருப்பதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

