Saturday, October 25, 2025 10:48 am
இலங்கை ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் (SriLankan Airlines) விமான சேவையை, மறுசீரமைக்கும் எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் இலாபத்தை அதிகரிப்பதற்காக தனியார் துறையுடன் சாத்தியமான கூட்டுச் செயற்பாட்டுக்கு கதவு திறந்துள்ளதாக உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் டெயிலி மிரர் நாளிதழ் இன்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சென்ற மார்ச் 31, 2025 இல் முடிவடைந்த ஆண்டில் 2.73 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது முன்னைய ஆண்டில் 7.9 பில்லியனாக இருந்தது, அதன் வருடாந்த அறிக்கையின்படி, கடந்த ஆண்டின் தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், சுமார் 134.6 சதவீதம் சரிவை இது குறிக்கின்றது.
மொத்த வருவாய் 10.8% குறைந்து ரூ. 303 பில்லியன், முதன்மையாக குறைந்த பயணிகள் வருவாய் மற்றும் அந்நிய செலாவணி ஏற்ற இறக்கங்கள் காரணமாக. செயற்பாட்டுச் செலவுகள், 11.7% குறைந்து ரூ. 276.3 பில்லியன், ஆனால் இந்த செலவுக் குறைப்புக்கள் வருமானத்தின் வீழ்ச்சியை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என அந்த அதிகாரி விபரித்துள்ளார்.
அடுத்த வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் விமான சேவையை புத்துயிர் பெறுவதற்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்து கருத்து கேட்ட போது, அதற்குப் பதிலளித்த எயார்லைனஸ் நிறுவன தலைவர் சரத் கனேகொட, சில நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும், ஆனால் அரசாங்கத்தின் சார்பாக தன்னால் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் சொன்னார்.
தனியார் துறையுடன் கூட்டுசேர்வதற்கு ஏதேனும் திட்டம் இருக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், லாபத்தை அதிகரிக்க தனியார் துறையினருடான கூட்டாண்மைக்குத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அதேவேளை, ஐஎம்எப் (IMF) எனப்படும் சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களை அரசாங்கம் மறுசீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. நஷ்டமடையும் சில அரச நிறுவனங்களை தனியார் துறையிடம் கையளிக்கும் பரிந்துரைகளும் உண்டு.
ஆனால் ஐஎம்எப்பின் அந்த பரிந்துரைகளை அநுர அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை.
ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், தேசிய விமான சேவையை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தது, ஆனால் அந்த நேரத்தில் தனியார் துறையிலிருந்து யாரும் முன்வரவில்லை. இதனால் அரசாங்கம் விமான சேவையை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இருந்தாலும் தற்போதைய அநுர அரசாங்கம், விமான நிறுவனத்தின் கடன் சுமையை குறைக்க சகல நிதி அணுகுமுறைகளை தயாரித்துள்ளதாக அமைச்சரவைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

