Friday, October 24, 2025 8:56 am
இலங்கை இராணுவத்தினரால் வடக்கு கிழக்கில் பாவனைக்கு வைத்திருந்த 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பொதுமக்களிடம் மீளவும் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜெயசேகர நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
இலங்கைப் படையினர் பொதுமக்களின் காணிகளை அபகரித்துள்ளதாகவும் மீளவும் கையளிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரங்களையும் தமிழரசுக் கட்சி உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் அமைச்சரிடம் கேள்வி வினா தொடுத்திருந்தார்.
வாய்மொழி கேள்வி நேரத்தின்போது வினா தொடுக்கப்ட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர் அருணா ஜெயசேக, ஜனவரி 1, 2025 நிலவரப்படி வடக்கில் மொத்தம் 672.24 ஏக்கர் நிலம் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அவற்றில், 86.24 ஏக்கர் தனியார் நிலங்களும், 586 ஏக்கர் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட நிலங்களும் உள்ளடங்கும் எனவும்
கிழக்கு மாகாணத்தில் 34.58 ஏக்கர் அரசாங்க நிலங்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ஜெயசேகர தெரிவித்தார்.
வவுனியா இராணுவ விமான நிலையத்தை சுற்றியுள்ள காணிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து குறிப்பிட்ட பிரதியமைச்சர், அது விரைவில் தீர்க்கப்படும் என்று உறுதியளித்தார்.

