நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 25 வருடங்கள் கடந்த நிலையில் அவருடைய இறப்பிற்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை என்பதுடன் குற்றவாளிகள் இனங்காணப்படவில்லை. இது தொடர்பில் சர்வதேச அளவில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். ஊடக அமையத்தில் அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
நிமலராஜனின் திருவுருவ படத்திற்கு குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான பெடி கமகே மலர் மாலை அணிவித்தனர்
தென்னிலங்கை ஊடகவியலாளர் அஜித் பொது சுடரேற்றியதை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
இலங்கையின் வடபகுதியில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் யாழ்ப்பாணத்திலிருந்து தற்றுணிவுடன் செய்திகளை வெளிக்கொணர்ந்தவர் நிமலராஜன்.
போர் சூழலில் ஊடகப்பணியாற்றிய நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை வீரகேசரி ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார்.
யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள அவரது வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இரவு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
அன்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை அவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுத தாரிகள் வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிரிழந்தார்.
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகளாகியும் இதுவரையில் அவரது இறப்பிற்கு நீதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

