உக்ரெயன், ரசியாவின் எரிவாயு ஆலை மீது நடத்திய தாக்குதல் , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ரசியாவின் பிரதான செய்தி ஊடகமான கொம்மர்சன்ற் (Kommersant) குற்றம் சுமத்தியுள்ளது.
ரசிய நேரப்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் பகல் வரை எரிவாயு நிலையம் மீது நடத்தப்பட்ட ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரெயன் நடத்திய 45 ட்ரோன்களில் 23 ரோன்களை இடைமறித்து அழித்ததாக அந்த ரசிய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் ரசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே வேளை, ரசியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரேன்பர்க் எரிவாயு ஆலை மீது உக்ரெயன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் எரிவாயு நிலையத்தின் ஒரு பகுதி முற்றாக தீயில் எரிந்துள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனமான ரொய்டர்ஸ் (Reuters) தெரிவித்துள்ளது.
உக்ரெய்ன் தலைநகர் கிவ்வில் இருந்து 1,700 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரேன்பர்க் நகர் மீது நடத்தப்பட்ட ரோன் தாக்குதலால் குறித்த பகுதியில் பதற்றம் நிலவுவதாக ரொய்டரஸ் கூறுகின்றது.
இத் தாக்குதல் பற்றி கருத்து வெளியிட்டுள்ள ஒரேன்பர்க் பிராந்திய ஆளுநர் யெவ்ஜெனி சோல்ட்செவ், உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றார். அத்துடன் தீ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.