கொழும்பு மேல் நீதிமன்ற சாட்சிக் கூண்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலையின் பின்னர், யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த இளம் பெண் தக்சி, ஐரோப்பிய நாடொன்றுக்குச் செல்லலாம் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றப்பட்டாரா என்பது தொடர்பாக தற்போது சந்தேகங்கள் எழுந்துள்ளன.
சிங்கள மொழியும் பேச வேண்டும் என்று கூறி சந்தேக நபர்களில் ஒருவரான சுரேஸ் என்பவர், தக்சியை ஏமாற்றி நேபாள நாட்டுக்கு அழைத்து சென்றதாக குற்றப் புலனாய்வு பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து அறிய முடிகின்றது.
செவ்வந்தியை போன்ற தோற்றம் இருந்த காரணத்தினால் தக்சியின் கடவுச்சீட்டில், செவ்வந்தியை ஐரோப்பிய நாடொன்றுக்கு அனுப்புவதற்காகவே அந்தப் பெண் ஏமாற்றப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
அதேவேளை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கு ஏற்ப, பிரதான சந்தேக நபரான செவ்வந்தி கொலையின் பின்னர், தங்கியிருந்தாக நம்பப்படும் பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார்.
நேற்று 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட செவ்வந்தி, அங்கு வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார். கிளிநொச்சியில் தான் தங்கியிருந்த வீடு தனக்கு ஞாபகம் இல்லை என்று ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கூறியிருந்தார்.
ஆனாலும், பொலிஸார் அவரை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். 90 நாட்கள் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள செவ்வந்தியிடம் விசாரணை நடத்தி வரும் பொலிஸார், மேலும் பல புதிய தவல்களை பெறுவதாகவும், ஆனாலும் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதால் சில உண்மைத் தகவல்களை வெளியிட முடியாது என்றும் கூறியுள்ளனர்.