இலங்கைத் தீவில் குறிப்பாக கொழும்பில் பரபரப்பாக பேசப்படும் கணேமுல்ல சஞ்சீவ என்ற சக்தி வாய்ந்த பாதாள உலகத் தலைவரின் கொலை பற்றிய விவகாரங்களில் செவ்வந்தி எனப்படும் இளம் பெண் நேபாளத்தில் கைது செய்யப்பட்டமையாகும்.
செவ்வந்தியும் ஏனைய சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கடத்தப்பட்டமை தொடர்பாக நேபாளத்தில் இருந்து வெளிவரும் நேபாளம் போஸ்ட் என்ற ஆங்கில நாளிதழ் (The Kathmandu Post) இன்று 19 ஆம் திகதி சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதான சந்தேக நபரான 26 வயதுடைய இஷாரா செவ்வந்தி, இன்டர்போல் சர்வதேச பொலிஸ் பிரிவு நேபாள பொலிஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு கைது செய்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மேற்பார்வையில் நேபாள பொலிஸார் ஆட்மபர வீடொன்றில் மறைந்திருந்த பிரதான குற்றவாளிகளை கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கை ஒன்றையும் நேபாள பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
ஆனால் இலங்கைப் பொலிஸார், பிரதான சந்தேக நபர்களை நேபாளத்தில் கைது செய்யும் விவகாரத்தில் ஈடுபட்டா்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.
இலங்கைப் பொலிஸார் நேபாளத்துக்கு சென்று நேபாள பொலிஸ் ஒத்துழைப்புடன் சந்தேக நபா்களை கைது செய்ததாக கொழும்பில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இன்டர்போல் சர்வதேச பொலிஸ் உதவிகள் பெறப்பட்டிருந்ததாகவும் கொழும்பு ஊடகச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேபாள பொலிஸாரின் விசாரணையில் கைதான ஆறு பேரும் மலேசியா மற்றும் துபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை குற்றவியல் அமைப்பான கெஹல்பத்தர பத்மே கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.
கடந்த ஓகஸ்ட் 25 ஆம் திகதி இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பத்மேவுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பையும் பிறப்பித்திருந்தது.
சஞ்சீவாவின் படுகொலைக்குப் பின்னால் பத்மே தான் மூளையாக செயற்பட்டதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் நேபாளம் போஸ்ட் என்ற செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் பல வாரங்களாக நேபாளத்தில் ரகசியமாக வசித்து வந்தனர், போலி அடையாளங்களைப் பயன்படுத்தி இந்திய குடிமக்கள் என்று கூறிக்கொண்டனர்.
அவர்களில் இருவர் விமானம் மூலம் நேபாளத்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகின்றது, மற்றவர்கள் இந்தியாவிலிருந்து தரைவழியாக எல்லையைத் தாண்டியதாக நம்பப்படுவதாகவும் நேபாளம் போஸ்ட் மேலும் விபரித்துள்ளது.