அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் இருந்த போது, அங்கு செல்வாக்குச் செலுத்தியிருந்த இந்தியா, 2020 ஆம் ஆண்டு தலிபான் போராளிகளிடம் ஆட்சியைக் கையளித்து விட்டு வெளியேறியதால், அந்த செல்வாக்கை இழந்தது.
குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாட்டில் பல அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் முதலீடுகளை இந்தியா மேற்கொண்டிருந்தது. ஆனால் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதும் இந்திய முதலீட்டாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
ஆனாலும் நான்கு வருடங்களின் பின்னர் அதாவது 2025 ஆம் ஆண்டில் இருந்து தலிபான் அரசாங்கம் இந்தியாவுடன் உறவை பேண ஆரம்பித்துள்ளது. இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குத் தேவையான அபிவிருத்திகளை இந்தியா மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.
இவ்விரு நாடுகளும் அரசியல், வர்த்தக மற்றும் தூதரக உறவுகளை பலப்படுத்த விரும்புவதை சமீபத்திய இந்திய ஆப்கானிஸ்தான் உறவு எடுத்துக் காண்பிப்பதாக லண்டன் பிபிசி (BBC) ஆங்கில செய்திச் சேவை தெரிவிக்கின்றது.
ஆப்கானிஸ்தான் பற்றி மிகச் சமீபத்தில் இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கைகள் இராஜ தந்திர உறவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சுமார் ஒரு வார காலம் நீடித்த தலிபான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தக்கியின் இந்தியப் பயணம், ஆப்கானிஸ்தான் தொடர்பான தங்கள் கொள்கைளை இந்தியா மாற்றியுள்ளதாக பிபிசி (BBC) செய்திச் சேவை தெரிவிக்கின்றது.
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப் பிரச்சினை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் அமிர்கான் முத்தக்கி இந்தியாவுக்குப் பயணம் செய்திருக்கின்றார். தலிபான்களும் பாகிஸ்தான் அரசுடன் மிகச் சமீப காலமாக முரண்பட்டுக கொண்டிருக்கின்றன.
இப் பின்னணியில் இந்திய ஆப்கானிஸ்தான் இராஜ தந்திர உறவு பிராந்தியத்தில் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதே நேரம் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் பெரும் பகையாக இருந்த நிலையில், மீண்டும் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான இராஜ தந்திர உறவு வளர்ந்து வருகின்றமை பாகிஸ்தான் அரசுக்கு பெரும் அச்சுறுத்தல் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.