இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கை எந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக சீன ஜனாதிபதி இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் விளக்கமளித்ததாக கொழும்பில் உள்ள உயர்மட்ட அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவை மையப்படுத்திய இந்தோ – பசுபிக் விவகாரத்தில் இலங்கை சீனாவுக்குப் பக்கபலமாக நிற்க வேண்டும் என சீனா விரும்புவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான ஒரு நிலையில், பிரதமர் ஹரிணியின் சீனப் பயணத்தின் போது இந்த விவகாரம் குறித்தும் விரிவாக பேசப்பட்டதாக அறிய முடிகின்றது.
ஆனால் சந்திப்பு தொடர்பாக கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விபரங்கள் இருக்கவில்லை.
இருந்தாலும் கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்களின் தகவல்களின் பிரகாரம், இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கையுடன் சீனா நெருக்கமான உறவை பேண விரும்புவதாக சீன ஜனாதிபதி வலியுறுத்தியதாக தெரிகின்றது.
அதேநேரம் சீன, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுடன் இலங்கை ஒத்துழைத்து செயற்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய சீன பிரதமரிடம் தெரிவித்தாக கொழும்பில் இன்று புதன்கிழமை வெளியான சிங்கள நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.
சீனாவுக்கு மூன்று நாள் பயணம் செய்துள்ள ஹரிணி அமரசூரிய, அங்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன அரச உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து உரையாடியுள்ளார். இலங்கையின் அபிவிருத்திக்கு ஏற்புடைய, சீன முதலீடுகள் உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களும் பேசப்பட்டதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைத்தீவின் சமூக – பொருளாதார, கடல்சார் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் (Belt and Road) திட்டம் என அழைக்கப்படும் பட்டுப்பாதை திட்டத்தின் கீழ், சீன – இலங்கை ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் சீனாவின் இந்தப் பட்டுப்பாதை திட்டத்தை அமெரிக்க – இந்திய அரசுகள் எதிர்க்கின்றன. அபிவிருத்தி என்ற பெயரில் சீனா தனது இராணுவ ஆதிக்கத்தை பிராந்தியத்தில் நிலை நிறுத்த இத் திட்டத்தை பயன்படுத்துவதாக ஏற்கனவே குற்றம் சுமத்தியிருந்தன.
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னரான சூழலில், இந்தியாவிடம் இருந்து 4 பில்லியன்களுக்கும் அதிகமான கடன்களை இலங்கை பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணி வந்த இலங்கை அரசு, அநுர அரசாங்கம் பதவியேற்ற பின்னரான சூழலில் அமெரிக்க – இந்திய அரசுகளுடன் உறவை சமநிலையில் பேண முற்பட்டு வருகின்றது.
இப் பின்னணியில் பிரதமர் ஹரிணியின் சீன பயணத்தின் பின்னர் இலங்கையின் சீன – இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.